இக்கட்டுரை ஔவை அருள் அவர்கள் செப்டம்பர் 5,2024 நாளிட்ட தினமணி இதழுக்கு எழுதிய கட்டுரை அறிவு உலகப் பொது என்பார்கள். ஆனால், அறிஞன் உலகப் பொதுவல்ல என்பது உலக நடைமுறை. ஓர் அறிஞரின் அறிவின் பேருழைப்பால் விளைகின்ற நற்கனிகளாம் நூற்செல்வங்கள், அவருக்குப் பின்னர் சிலர் கைகளில் மட்டும் சென்று தங்கிவிடாமல், நாட்டின் கடைக்கோடித் தமிழனுக்கும் சென்று சேர்க்கின்ற அரும்பணிக்குப் பெயரே நாட்டுடைமை என்பது. மறைந்த படைப்பாளிகளின் பதிப்புரிமை அவர்களுடைய குடும்பத்தினர், மரபு வழியினர், பதிப்பகத்தார் ஆகியோரின் நிலையான சொத்தாகவே நிலவி வருகிறது. அறிவென்பது பொதுவாயினும், மரபுரிமை ஒன்றால் மட்டும் அது மங்கிவிடக் கூடாதென்ற பெருநோக்கும் பெருந்தகைமையும் கொண்ட தமிழ்நாடு அரசால் விளைந்த அறிவுத் திருப்பணியே நாட்டுடைமை ஆகும். தொன்மைக் காலம்தொட்டே, தமிழர் அறிவின்மீதும், கல்வியின்மீதும் எல்லையில்லா வேட்கையுடையவர்கள் என்பதை உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே (புறம்.183), விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல், கற்றா ரோடேனை யவர் (குறள் 410) பிச்சைபுகினும் கற்கை நன்றே (வெற்றி வேற்கை15) என்ற...